அபர்ணா நாயர்..

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கரமனா பகுதியில் வசித்துவந்தார் நடிகை அபர்ணா நாயர். 33 வயதான அவர், சினிமாவிலும் மலையாள டி.வி சீரியல்களிலும் நடித்துவந்தார்.
மேகதீர்த்தம், முத்துகெளவ், அச்சாயன்ஸ், கல்க்கி உள்ளிட்ட சினிமாக்களில் நடித்திருக்கிறார். மேலும், சந்தனமழை, ஆத்மசகி, மைதிலி மீண்டும் வருந்நூ, தேவஸ்பர்சம் உள்ளிட்ட டி.வி சீரியல்களில் நடித்துவந்தார். அவருக்கு சஞ்சித் என்ற கணவரும், த்ரியா, கிருத்திகா ஆகிய இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

நடிகை அபர்ணா நாயர் கரமனாவிலுள்ள வீட்டில் தாய், சகோதரி ஆகியோருடன் நேற்று இரவு இருந்தார். அந்த சமயத்தில் நடிகை அபர்ணா நாயரை சற்று நேரம் காணாததால் தாயும், சகோதரியும் அவரைத் தேடியிருக்கின்றனர்.
அப்போது அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அதையடுத்து உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இயற்கைக்கு மாறான மரணம் என கரமனா போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
நடிகை அபர்ணா நாயர் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது சமீபத்திய ஃபேஸ்புக் பதிவுகளில் அது வெளிப்பட்டிருந்தது. ஒரு பதிவில், “அந்தப் பழைய நான் அல்ல இப்போது. ஏன் என்று தெரியாமல் அடிக்கடி கண்கள் குளமாகின்றன.

தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். வெளிச்சத்தில் இருந்தாலும் இருட்டில் இருப்பதுபோன்று உணர்கிறேன். பழைய என்னை நான் மிஸ் பண்ணுகிறேன்” என அபர்ணா நாயர் பதிவிட்டிருந்தார். கடைசியாக அவர் மகளின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து சக நடிகர், நடிகைகளுக்கும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் ரிசெப்ஷனிஸ்ட்டாக வேலை செய்துவந்திருக்கிறார். குழந்தைகளைக் கவனிக்க யாரும் இல்லை என அவர் 15 நாள்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தூக்கிலிருந்து மீட்கப்பட்ட அபர்ணா நாயரை, அவர் கடைசியாகப் பணிபுரிந்த மருத்துவமனையில்தான் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். இதை அவருடன் பணிபுரிந்த சக பெண் ஊழியர்கள் வருத்தத்துடன் பகிர்ந்திருக்கின்றனர்.
அபர்ணா நாயரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. அபர்ணா நாயரின் தற்கொலை சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.















