ஒரு வருட கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை தீர்த்துக்கட்டி நாடகமாடிய மனைவி!!

2344

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே உள்ள கள்ளநாயக்கன்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்தது. அந்த சடலத்தின் வயிற்றில் கயிறு கட்டப்பட்டிருந்தது.

இது குறித்து கல்லுகுறுக்கி கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ், மகராஜகடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் சம்பூரணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது இறந்து கிடந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தினர்.


அத்துடன் அந்த பகுதியில் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா? என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பகுதியில் உள்ள ஆத்துகாவாய் என்னும் இடத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி மைக்கேல்ராஜ்(36) என்பவர் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது மனைவி ஜோஸ்பின் சிந்து(28) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிணற்றில் மீட்கப்பட்ட உடல் மைக்கேல்ராஜ் என்பதும், அவரது மனைவி ஜோஸ்பின் சிந்து மற்றும் அவரது கள்ளக்காதலன் விக்ரம்(19) என்பவரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான ஜோஸ்பின் சிந்து போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது கணவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சின்னப்ப நகர் ஆகும். அவர் கல் உடைக்கும் தொழிலாளி.

அவருக்கும் எனக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே உள்ள ஆத்துகாவாய் பகுதிக்கு வந்தோம். இங்கு எனது கணவர் கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.

அவர் வேலை செய்த அதே குவாரியில் கல் உடைக்கும் வேலைக்கு கிருஷ்ணகிரி தர்மராஜா நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் விக்ரம்(19) என்பவர் வேலைக்கு வந்தார். அவர் எனது கணவருடன் சேர்ந்து எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்.

அப்போது அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் அடிக்கடி என்னுடன் வந்து உல்லாசமாக இருப்பார். இந்த விஷயம் எனது கணவருக்கு சமீபத்தில் தெரிய வந்தது. அவர் என்னை கண்டித்தார்.

அவனுடன் உள்ள கள்ளத்தொடர்பை இத்துடன் விட்டு விடு என்று என்னை மிரட்டினார். இது குறித்து நான் எனது கள்ளக்காதலன் விக்ரமிடம் கூறினேன். இதையடுத்து எனது கணவரை கொலை செய்து விட்டால், இனிமேல் நாம் உல்லாச வாழ்க்கை நடத்தலாம். நமது உல்லாச வாழ்க்கைக்கு யாரும் குறுக்கே வர மாட்டார்கள் என கூறினான். அதன்படி எனது கணவரை தீர்த்து கட்ட நாங்கள் திட்டமிட்டோம்.

இந்த நிலையில் வீட்டில் எனது கணவர் இருக்கும் தகவலை விக்ரமுக்கு தெரிவித்தேன். அவன் வந்தான். பின்னர் நாங்கள் 2 பேரும் சேர்ந்து எனது கணவர் மைக்கேல்ராஜே அடித்தே கொலை செய்தோம்.

பின்னர் உடலை அங்கிருந்து கள்ளநாயக்கன்பள்ளம் பகுதிக்கு கொண்டு வந்தோம். அதன் பிறகு நாங்கள் வைத்திருந்த கயிற்றை எடுத்து உடலை கல்லில் கட்டி கிணற்றில் தூக்கி போட்டு விட்டோம்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். உடலில் கல்லை கட்டி கிணற்றில் போட்டால் உடல் மேலே வராது யாருக்கும் தெரியாது என்று நினைத்தோம். ஆனால் உடல் மேலே வந்ததால் போலீசார் விசாரணையில் நாங்கள் மாட்டிக் கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், மனைவி ஜோஸ்பின் சிந்து மற்றும் அவரது கள்ளக்காதலன் விக்ரம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.