தமிழகத்தில் தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்த மனைவி, தன் கணவர் எப்படியாவது தன்னை காப்பாற்றிவிடுவார் என்று நினைத்ததாக இறப்பதற்கு முன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை, மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி மனோகரன்-சவுமியா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பிய போது, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் தனக்கு ஒரு பிரியாணி வாங்கி வரும் படி கூறி பணம் கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்த சவுமியா, தனக்கும் பிரியாணி வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, பின்னர் வாங்கி தருவதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால், வரும் போது, மனைவிக்காக மனோகரன் குஸ்கா வாங்கி வந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த சவுமியா, கணவரிடம் பிரச்சனை செய்துள்ளார். இந்த பிரச்சனை சிறிது, சிறிதாக பெரிய சண்டையாக மாறியுள்ளது.
இறுதியில், ஆத்திரமடைந்த சவுமியா, மனோகரனின் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து கொண்டு, மொட்டை மாடிக்கு எடுத்து சென்று உடம்பில் ஊற்றி தீயையும் வைத்து கொண்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மனோகரன் அதிர்ச்சியடைது, உடனடியாக சவுமியாவை மீட்டு, அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
உடல் அளவில் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் பொலிசாருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவர, பொலிசார் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சவுமியாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, எப்படியாவது அவர் என்னை காப்பாத்திடுவார் என்று நினைத்து பெட்ரோலை ஊற்றி அவசரப்பட்டுவிட்டேன் என்று கதறி அழுதுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சவுமியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.