சென்னை…

சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன் (38). பிளம்பிங் வேலை செய்து வரும் இவருக்கு தனலட்சுமி (32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மதன்குமார் (17), ஜீவா என 2 மகன்கள் உள்ளனர்.

மதன்குமார் ப்ளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவர் இளஞ்செழியன் குடிபழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடன் பணிபுரிந்து வந்த வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் (42), என்பவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது கார்த்திக் தனலட்சுமிக்கு ஆறுதல் வார்த்தை கூறியதுடன் கணவர் இளஞ்செழியனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க உதவி புரிந்துள்ளதாக தெரிகிறது.

நாளடைவில் தனலட்சுமிக்கும், கார்த்திக்குக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் வேளச்சேரி பகுதியில் ஒன்றாக வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இளஞ்செழியனின் மனைவி தனலட்சுமி கார்த்திக்கிடம் இருந்து பிரிந்து மீண்டும் குடும்பத்துடன் விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தனலட்சுமி அவரது கணவருடன் சென்றதால் ஆத்திரமடைந்த கார்த்திக் கடந்த 7-ம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள இளஞ்செழியன் வீட்டுக்கு சென்று தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

அப்போது கார்த்திக்குக்கும், தனலட்சுமியின் மகன் மதன்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவன் மதன்குமாரின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

படுகாயமடைந்த மதன்குமாரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போதைமறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய இளஞ்செழியனோடு சேர்ந்து வாழுமாறு தாய் தனலட்சுமியை மகன் மதன்குமார் மனதை மாற்றி அழைத்து சென்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவரை குத்தியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் மதன்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தற்போது விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்து போன மதன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.















