கள்ளக்காதலனுடன் பெண் செய்த காரியத்தால் சிறையில் அகப்பட்ட கணவன் : நடந்தது என்ன?

1057

பீகார்….

பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் லட்சுமிபூர் என்ற ஊரில் வசித்து வந்தவர் தினேஷ்ராம். இவரது மனைவி பெயர் சாந்திதேவி. 2016-ல் திருமணமான இவர்களது வாழ்க்கை சண்டை சச்சரவுடனேயே சென்று கொண்டிருந்தது.

திடீரென ஒருநாள் சாந்தி வீட்டைவிட்டு போய்விட்டார். அந்த சமயத்தில் சாந்தியின் அப்பா யோகேந்திர யாதவ், மகளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு மகளை காணோம் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு சென்று புகார் தந்தார்.

தன்னுடைய மகள் காணாமல் போனதற்கு மருமகன் தினேஷ் ராம்தான் காரணம், கல்யாணம் ஆனது முதலே மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்று புகார் சொன்னார்.


சீதனமாக பைக், 50 ஆயிரம் பணம் வேண்டும் என்று தினேஷ் ராம் கேட்டு வந்த நிலையில்தான், மகளை தற்போது காணவில்லை, என் மகளை தினேஷ்தான் கொன்றுவிட்டார், அது குறித்து நடவடிக்கை வேண்டும்” என்று அந்த புகாரில் மேலும் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசாரும், தினேஷ் ராமை கைது செய்து ஜெயிலில் அடைத்துவிட்டனர்.

இதனிடையே, சாந்தி இறந்துவிட்டதாக திடீரென ஒரு தகவல் வந்தது. எனவே, உடலையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீஸார் அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கினர்.

அப்போதுதான், சாந்தியின் போன் சிக்னல் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்தால், ஏதாவது க்ளூ கிடைக்கும் என்று நம்பி , அதை கண்காணிக்கவும் ஆரம்பித்தனர்.

போன் சிக்னல் அந்த போன் சிக்னல் பஞ்சாப்பின் ஜலந்தரில் இருப்பது தெரிய வரவும், தனிப்படை போலீஸார் ஜலந்தருக்கு விரைந்து சென்றனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி ஒருவழியாக சாந்தியின் செல்போன் சிக்னல் காட்டிய இடத்தை அடைந்தனர்.

ஏதாவது க்ளூ கிடைக்கும் என்று பார்த்தால், அங்கு போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அங்கு சாந்தியே உயிருடன் இருந்தார். அதுமட்டுமல்ல. அவர் தன்னுடைய கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தி கொண்டிருந்தார்.

பிறகு சாந்தியை விசாரணைக்காக பீகார் மாநிலம் மோதிஹாரிக்கு அழைத்து வந்தனர். மேலும், இத்தனை காலமும் பரிதாபமாக ஜெயிலுக்குள் அடைபட்டுகிடந்த கணவர் தினேஷையும் விடுவித்தனர். கள்ளக்காதலனுடன் கம்பி நீட்டிய சாந்தி இறந்துவிட்டார் என்ற செய்தியை பரப்பி விட்டது யார் என்பது குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது காவல்துறை.