
தாம்பரம் அருகே உள்ள வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் இரண்டு உடல்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று (பிப்ரவரி 11) நள்ளிரவு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, கை, கால் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ஒரு இளைஞன் மற்றும் ஒரு இளம் பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் இறந்தவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த விக்ரம் (21) மற்றும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி (22) என்பது தெரியவந்தது.
விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி, இறந்த இருவரும் வண்டலூர் அருகே வசித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், இருவரும் காதலர்கள் என்றும் கூறினார்.
மேலும், நேற்று இரவு இருவரும் பேசிக் கொண்டே கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது, அவ்வழியாகச் சென்ற மின்சார ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.விபத்து குறித்து இருவரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து,
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இருவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் தாம்பரம் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் தாம்பரம் அருகே தண்டவாளத்தைக் கடக்கும்போது காதல் ஜோடி மின்சார ரயிலில் மோதி உயிரிழந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.















