கேரள மாநிலம்…..

கேரள மாநிலம், பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபத்தை அடுத்த நெய்யூரிலுள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்தார். குமரி மாவட்டம், களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவர் அழகியமண்டபத்தில் கல்லூரி ஒன்றில் படித்துவந்தார்.

ஷாரோன் ராஜும், கிரீஷ்மாவும் ஒரே பேருந்தில் செல்லும்போது ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் தனியாகச் சந்தித்து, காதலை வளர்த்தனர். இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கும், ராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.
இதையடுத்து காதலன் ஷாரோன் ராஜைக் கழற்றிவிடுவதற்காகப் பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டார் கிரீஷ்மா. தனது வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அம்மா தற்கொலை செய்துகொள்வதாகச் சொல்வதாகவும் கூறி, காதலனைப் பிரிய முயன்றார்.

அது நடக்காததால், ஜாதக நிலைப்படி தன்னைத் திருமணம் செய்பவர் உயிருடன் இருக்க மாட்டார் எனச் சொல்லிப் பார்த்தார். ஆனால், ஷாரோன் ராஜ் காதலைக் கைவிடுவதாக இல்லை.
காதலனால் திருமணத்துக்கு இடையூறு ஏற்பட்டுவிடுமோ என நினைத்த கிரீஷ்மா, குளிர்பானம் உள்ளிட்டவற்றில் மாத்திரைகளைக் கலந்து கொடுத்து, ஷாரோன் ராஜைக் கொலைசெய்ய முயன்றிருக்கிறார். ஆனால், ஷாரோன் ராஜ் அந்த முயற்சிகளில் உயிர் தப்பியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு, அக்டோபர் 14-ம் தேதி ஷாரோன் ராஜைத் தனிமையில் இருக்கலாம் என வீட்டுக்கு அழைத்திருக்கிறார் கிரீஷ்மா. அங்கு சென்ற ஷாரோன் ராஜுக்கு கஷாயத்தில் பூச்சிமருந்து கலந்து கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்த ஷாரோன் ராஜ், கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி இறந்துபோனார்.

ஷாரோன் ராஜின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெடுமங்காடு போலீஸார் கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி கிரீஷ்மாவைக் கைதுசெய்தனர். மேலும், கிரீஷ்மாவுக்கு உதவியதாக அவரின் தாய் சிந்து, தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.

ஷாரோன் ராஜைக் கொலைசெய்யப்போவதை கிரீஷ்மாவின் அம்மா சிந்து முன்கூட்டியே அறிந்திருந்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதே போன்று கிரீஷ்மாவின் தாய்மாமா நிர்மல்குமார் கொலைக்கான தடயங்களை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து, நிர்மல்குமார் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் முன்பே விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

காதலன் ஷாரோனைக் கொலைசெய்த வழக்கில் கிரீஷ்மாவுக்கு எதிராக குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே நெய்யாற்றின்கரை ஜூடிஷியல் ஃபர்ஸ்ட் கிளாஸ் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நடந்துவந்த சமயத்தில் கிரீஷ்மா திருவனந்தபுரம், அட்டகுளங்கரைப் பெண்கள் சிறையிலிருந்து கடந்த 15-ம் தேதி மாவேலிக்கரை ஸ்பெஷல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கேரள ஹைகோர்ட் இன்று கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், சம்பவம் நடந்த கிரீஷ்மாவின் வீடு தமிழ்நாட்டில் வருவதால், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க வேண்டும் என்ற கிரீஷ்மா தரப்பு அளித்திருக்கும் மனுமீதான விசாரணையை,ஹைகோர்ட் இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்திருக்கிறது.















