உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த காதலி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்தார்.
இதையடுத்து மன அழுத்தத்தில் இருந்து வந்த காதலனும் காதலியுடன் செல்லப் போவதாக கூறி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் சஞ்சீவி (23). திண்டிவனத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த சஞ்சீவி, அந்த பகுதியில் இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், காதலி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து கடந்த சில நாட்களாகவே யாரிடமும் பேசாமல், வங்கி பணிக்கும் செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் சஞ்சீவி.
இந்நிலையில் பெற்றோர்கள் விவசாய வேலைக்காக வெளியே சென்றிருந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சஞ்சீவி தனது அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாய வேலை முடிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்த பார்த்த போது, சஞ்சீவி தூக்கில் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதனர். அருகில் இருந்தவர்கள் இது குறித்து மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சஞ்சீவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.