காதல் திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோர் : பின்னர் நடந்த விபரீதம்!!

616

தென்காசி…

தென்காசியை போலவே நெல்லையில் காதல் திருமணம் செய்த மகளை பெற்றோர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் தென்காசியில் காதல் திருமணம் செய்த குருத்திகா என்ற இளம்பெண்ணை, அவரது பெற்றோர் குஜராத்திற்கு கடத்திச் சென்றனர். அதன்பிறகு, பல்வேறு கட்ட நீதிமன்ற விசாரணைகளுக்கு பின், அந்த இளம்பெண் உறவினர்களுடன் சென்று விட்டார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நெல்லையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த தங்கராஜா -சுகந்தி தம்பதியரின் மகன் முருகன் (24),


பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன்-பத்மா தம்பதியரின் மகள் சுமிகா (19) ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்ததால், சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த மாதம் 18ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுமிகாவின் தந்தை முருகேசன் தனது மகளை காணவில்லை என்று கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார். இதையடுத்து முருகன், சுமிகா இருவரையும் போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் திருமணம் செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்து சேர்ந்து வாழ்வதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்கள் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர். இதை அறிந்த அங்கு வந்த சுமிகாவின் உறவினர்கள், அவரை தாக்கி இழுத்து சென்று காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

அதை தடுத்த முருகனின் பெற்றோரை அவர்கள் அவதூறாக பேசி தாக்கியதாகவும் தெரிகிறது. பின்னர், இது தொடர்பாக சுமிகாவின் கணவர் முருகன் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் சுமிகாவின் தந்தை முருகேசன், தாய் பத்மா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருவதுடன் சுமிகாவை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.