காதல் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

700

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காதல் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை உருமன்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சுயம்பு மகன் முத்துகுமார் (37) மினிபஸ் டிரைவர்.

இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த ஜாய்ஸ் (30) என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த காதல் தம்பதியர் உடன்குடி தேரியூர் ஆண்டிவிளை பகுதியில் வாடகை வீட்டி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காதல் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 29ம் தேதி அதிகாலையில் திடீரென ஜாய்ஸ் தலையில் காயத்துடன் மயக்கமான நிலையில் 108 ஆம்புலன்ஸ் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கு திருமணமாகி 6ஆண்டுகளே ஆவதால் திருச்செந்தூர் உதவி கலெக்டர் சுகுமாறன் ஜாய்ஸ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜாய்ஸ் மரணம் குறித்து முத்துக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


முதலில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக நாடகமாடிய அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதில், அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மனைவியை அவர் அடித்து கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

அப்போது அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், காதல் திருமணம் செய்த எங்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து அவளிடம் நான் கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும், அவளது நடத்தை குறித்து நான் கேட்டதால் ஏற்பட்ட தகராறு முற்றியதில், பூரி கட்டையால் தலையில் தாக்கினேன். இதில் அவளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தாள்.

அவள் மயக்கம் தெளியாமல் இருந்ததால் பயந்து போன நான், பின்னர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வரவழைத்தேன். அந்த ஆம்பலன்சில் மனைவியை ஏற்றி கொண்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன்.

அங்கு அவளைப் பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கொலையை மறைக்க முயற்சித்தேன். போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கி கொண்டேன், என தெரிவித்தார். இதை தொடர்ந்து குலசேகரன்பட்டினம் போலீசார் அவரை கைது செய்தனர்.