குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சி வீடியோ!!

536

மும்பை….

மும்பை பாந்த்ரா கடற்கரையில் பாறைகள் அதிகம். கடலில் சீற்றம் ஏற்பட்டால் பாறைகளை சுற்றி தண்ணீரின் வரத்து அதிகமிருக்கும். பொதுவாக இந்தப் பாறைகளில் தான் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது . அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென கடலில் நீர்மட்டம் அதிகரிப்பதும் வாடிக்கை தான்.

அது போன்ற சமயங்களில் தயாராக இருக்கும் தீயணைப்புத்துறையினர் அல்லது லைப் கார்டுகள் தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்டுவிடுவர். இத்தனை ஆபத்துக்கள் இருந்தாலும் இந்தக் கடற்கரையில் நள்ளிரவுவரை இது போன்று கடலுக்குள் இருக்கும் பாறையில் காதலர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பர்.

எத்தனை தான் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. தற்போது மழைக்காலம் என்பதால், கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல், கடலுக்குள் இருக்கும் பாறைக்குச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.


27 வயது ஜோதி சொனார் என்ற இளம்பெண் தன் கணவர் முகேஷ் மற்றும் 3 குழந்தைகளுடன் பாந்த்ரா கடற்கரைக்குச் சென்றிருந்தார். கடற்கரையில் சிறிது நேரம் தன்னுடைய குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் ஜோதி, அவருடைய கணவருடன் குழந்தைகளை கடற்கரையில் விட்டுவிட்டு, கடலுக்குள் இருக்கும் பாறையில் அமர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் சென்றனர். அவர்கள் பாறையில் அமர்ந்து செல்பி எடுத்துக்கொண்டிருந்த போது திடீரென கடலில் அலைகள் மிகவும் சீற்றம் அதிகரித்தது. அலைகள் பாறையில் மோதி அவர்கள் இருவர் மீதும் பட்டுச் சென்றது. கடற்கரையிலிருந்த குழந்தைகள் பயத்தில், `அம்மா அம்மா வாருங்கள்’ என கத்தி கூச்சலிட்டனர்.

உடனே அங்கிருந்து வரமுடியாத அளவுக்கு கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் இருந்தது. ஒரு கட்டத்தில் பாறையில் அமர்ந்திருந்த 2 பேரையும் வேகமாக வந்த ராட்சத அலை ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. குழந்தைகள் கடற்கரையில் நின்று கொண்டே கூச்சலிட்டனர். லைப்கார்டுகள் கடலில் குதித்து காப்பாற்ற விரைந்தனர்.

ஆனால் துரதிர்ஷ்டவச்மாக ஜோதியை காப்பாற்ற முடியவில்லை. கடல் அலைகளிலிருந்து ஜோதியின் கணவரை மட்டுமே லைப் கார்டுகளால் காப்பாற்ற முடிந்தது. ஜோதி கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விட்டார்.

ஜோதியின் உடல் 20 மணி நேர தேடுதலுக்குப் பிறகே மீட்கப்பட்டது. அவர்கள் கடலுக்குள் அலைகளால் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.