கொரோனாவால் ஊசலாடும் தந்தையின் உயிர்… துணிச்சலான முடிவை எடுத்த இளைஞர்!

1117

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தைக்காக 1000 கி.மீ தொலைவு காரை ஓட்டிச் சென்று இளைஞர் ஒருவர் மருந்து வாங்கி வந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த 28 வயது இளைஞர் ஜோயல் பின்டோ. இவருடைய தந்தை கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்ர்கள், அவருக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்றினை குணப்படுத்த, ‘டோசிலிசுமாப்’ என்ற மருந்தினை வாங்கி வரும் படி பரிந்துரை செய்தனர்.

அரிதானதும் மிகவும் விலை உயர்ந்த மருந்து வகையை சார்ந்தது அது. குறிப்பிட்ட மருந்தகங்களில் மட்டும் விற்பனையில் இருக்கும் அந்த மருந்தின் விலை ரூ 75,000 முதல் ரூ 95,000 வரை என கூறப்படுகிறது.

இதையடுத்து இளைஞர் ஜோயல் பின்டோ, சென்னையில் மருந்திற்காக கடை கடையாக அலைந்து பார்த்தார். விசாரித்ததில் கடந்த 15 நாட்களாக மருந்து கிடைப்பதில்லை என்று அறிந்தார்.

மருத்துவரிடம் கேட்டதற்கு, 2 நாட்களில் மருந்து கிடைத்து விடும் என்று ஆறுதல் கூறியுள்ளார். இருப்பினும் மருந்து வந்தபாடில்லை. இன்னும் தாமதம் ஆனால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதையும் அவர் அறிந்தார்.


இந்த நிலையில் ஐதராபாத்தில் அதே மருந்து இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு மருந்தினை தபால் மூலம் அனுப்பினால் 3 நாட்கள் வரை தாமதமாகலாம் என தெரியவந்தது.

இனியும் தாமதித்தால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்று அறிந்த இளைஞர், இ-பாஸ் எடுத்து ஐதராபாத்திற்கு தன் சொந்த காரை தானே ஓட்டிச் சென்றார்.

கடந்த செவ்வாய் அதிகாலை ஒரு மணிக்கு ஐதராபாத் சென்றடைந்து, மருந்தினை நேரிடையாக பெற்று, அங்கிருந்து உடனே சென்னைக்கு கிளம்பி அதே நாள் நண்பகல் வேளையில் சென்னை வந்தார்.

அதன் பின் மருந்து அவர் தந்தைக்கு செலுத்தப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இளைஞரின் துணிச்சலான சமயோசிதமான நடவடிக்கையால் தன் தந்தையின் உயிரை அவர் காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.