கொரோனா: பயன்படுத்தப்பட்ட ‘பி.பி.இ. கிட்’டை தெருவுக்கு இழுத்து வந்த நாய்!!

959

​​இதன்மூலம், தொற்று மேலும் அதிகரிப்பதுடன், மற்ற தெரு நாய்களுக்கும், அதன் மூலம் வேறு விலங்குகளுக்கு தொற்று வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

கோவையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட பி.பி.இ., கிட்டை நாய் கடித்து இழுத்து செல்லும் புகைப்படம் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தின் சாட்சியமாக அமைந்துள்ளது பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஈ.எஸ்.ஐ., மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழுமையாக மாற்றப்பட்டது. கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளும், அரசுப்பள்ளி ஒன்றும் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வருகிறது.

இந்நிலையில், மே மாதம் முதல் உள்நாட்டு விமான சேவை மற்றும் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகளவு உள்ள நிலையில், ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் படுக்கைகள் போதுமான அளவு இல்லாததால், மிகப்பெரிய வணிக வளாகமான அவினாசி சாலையில் கொடிசியா வணிக வளாகத்தில் உள்ள டி ஹாலை தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டது.

இங்கு, கொரோனா அறிகுறியுடன் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லாதவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 200 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கூடுதலாக 200 என 400 பேர் சிகிச்சை பெரும் வகையில் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த மையத்தில் பயன்படுத்தப்பட்ட பி.பி.இ., கிட்டை நாய் கடித்து செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், தொற்று மேலும் அதிகரிப்பதுடன், மற்ற தெரு நாய்களுக்கும், அதன் மூலம் வேறு விலங்குகளுக்கு தொற்று வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளதுடன், இதுபோன்ற ஆடைகள் கையாளப்படுவதில் ஐய்யத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா சிகிச்சை மையம் இவ்வளவு அலட்சியமான கட்டமைப்புடன் செயல்படுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், முறையான பாதுகாப்பு கட்டமைப்புடன் செயல்பட வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.