கோழிக்கறி குழம்பு வைக்காத மனைவி… ஆத்திரத்தில் கணவனால் அரங்கேறிய பயங்கரம்!!

620

தெலுங்கானா…

தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் கிராமத்தில் வசித்து வருபவர் கலிபெல்லி போஷம். இவரது மனைவி சங்கரம்மா. போஷம்மிற்கு 50 வயது, சங்கரம்மாவுக்கு 45 வயதாகிறது. கடந்த புதன்கிழமை கோழிக்கறி வாங்கி வந்த போஷம் அவரது மனைவி சங்கரம்மாவிடம் கொடுத்து குழம்பு வைக்கும்படி கூறியுள்ளார்.

ஆனால் சங்கரம்மா கோழிக்கறி குழம்பு வைக்காமல் கத்தரிக்காய் குழம்பு வைத்துள்ளார். வேலையை முடித்துவிட்டு இரவு குடி போதையில் வீட்டிற்கு வந்த போஷம், சங்கரம்மாவிடம் சாப்பாடு போடும்படி கேட்டுள்ளார்.

அப்போது சங்கரம்மா கத்தரிக்காய் குழம்பை பரிமாறியுள்ளார். இதனால் கடுப்பான போஷம், கோழிக்கறி எங்கே? ஏன் குழம்பு வைக்கவில்லை என கேட்டுள்ளார்.


இதில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களது இளையமகன் சந்தோஷ் ஒரு அறையில் உறங்கியுள்ளார். போதையில் போஷம் உறங்கிவிடவும், சங்கரம்மாவும் வேறு ஒரு அறையில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலையில் விழித்த போஷம், கோடரியால் சங்கரம்மாவின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

சங்கரம்மாவின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அவரது மகன் சந்தோஷ், தனது தாய் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சங்கரம்மாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் சந்தோஷ். மருத்துவமனையில் சங்கரம்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சங்கரம்மாவின் கணவர் போஷமை தேடி வருகின்றனர். கோழிக்கறி குழம்பு வைக்காத ஆத்திரத்தில் கட்டிய மனைவியின் கழுத்தை கணவன் கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.