உயிரிழந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி துணைத் தலைவராக புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு அதிரடிப் படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபாதேவி, வித்யாராணி என்கிற மகள்கள் உள்ளனர். இவர்களில் முத்துலட்சுமி, தி.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் மகளிரணி பொறுப்பாளராக இருக்கிறார்.
இந்நிலையில், வித்யாராணி வீரப்பனுக்கு கடந்த 15-ஆம் திகதி தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் இளைஞரணி மாநில துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
வித்யாராணி வீரப்பன் காதல் திருமணம் செய்து கொண்டதால், இவர் தற்போது, கிருஷ்ணகிரியில் தனது கணவர் குடும்பத்தினருடன் வசிக்கிறார். வழக்கறிஞரான இவர், அங்கு சிறுவர் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வித்யாராணி வீரப்பன், அப்பாவை என்னுடைய வாழ்க்கையில் ஒரே முறை தான் பார்த்திருக்கிறேன். அப்போது, எனக்கு மூன்று வயது, என்னுடைய தாத்த ஊரு கோபிநத்தத்துல நான் இருந்த போது, காட்டில் இருந்து திடீர் என்று வெளியே வந்த அப்பா என்னிடம் 10 நிமிடம் பேசினார்.
அப்போது அவர், நல்லா படி, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் என்கிட்ட சொன்னார். அதன் பின் அவரை நான் பார்க்கவே இல்லை.
அன்றை இருந்து, அப்பா சொன்ன, அந்த சேவை பண்ணணும் அப்படிங்ற வார்த்தை என் மனதுக்குள் ஆழமா பதிந்துவிட்டது. என்னால் மருத்துவர் ஆக முடியவில்லை என்றாலும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு சேவை செஞ்சிட்டு வருகிறேன்.
என் வாழ்க்கையில் நான் சந்திக்காத பிரச்னையே இல்லை. அரசியலிலும் எதிர்நீச்சல் போடுவேன். கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும் படித்தது எல்லாம் சென்னைதான். ஸ்ரீபெரும்புத்தூர் செயின்ட். ஜோசப் பள்ளி அயனாவாரம் பெத்தலகேம் பள்ளியில் படித்தேன்.
அதனால், நானும் ஒரு சிட்டி பொண்ணுதான். அரசியலிலும் கண்டிப்பா ஜெயிப்பேன். அம்மா வேற கட்சி, நான் வேற கட்சி என்று இருந்தாலும் ஒருவருடைய விஷயத்தில் மற்றவர்கள் தலையிட மாட்டோம்.
நான் தேசிய கட்சியை தேர்வு செய்து அதில் இணைந்திருக்கிறேன். பிரதமர் மோடி இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷைனாக இருக்கிறார். எனக்கும், அவர்தான் இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணனை இவரை சந்தித்துள்ளார்.
ஏற்கெனவே, சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததால், பொன் . ராதாகிருஷ்ணன் வேண்டுகோளை வித்யாராணி ஏற்று பா.ஜ.க. வில் சேர்ந்த நிலையில், தற்போது வருக்கு புதிய பதவி கட்சியில் கிடைத்துள்ளது.