Chennai College Student: சென்னை கொடூங்கையூரில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் ஒருவர் வேதியியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தால் பல்வேறு குற்றச்சம்பங்கள் மற்றும் இளைஞர்கள் சீரழிவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகரில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சுற்றியுள்ள வீடுதிகளில் அவ்வப்போது பேைாதப் பிரிவு தடுப்பு போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில், சென்னை கொடூங்கையூர் பகுதியில் மாணவர்கள் சிலர் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போதை தடுப்புபிரிவு போலீசார் கொடூங்கையூரில் ஒரு வீட்டில் இருந்த 7 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து 250 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கைதானவர்களில் பிரவீன், கிஷோர், தனுஷ், பிளம்மிங் பிரான்சிஸ் உள்ளிட்டோர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் 250 கிராம் எடையுள்ள மெத்தப்பெட்டமைன் எனும் போதைப்பொருளை வாங்கியுள்ளனர்.
இதை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த அருண் என்பவரிடம் 250 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைனை ரூ. 3 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். பின்பு அதனை 1 கிராம் 2000 ரூபாய் வீதம் விற்று வந்துள்ளனர்.
ஆனால், அவை அனைத்தும் போலியானது என வாங்கியவர்கள் கூறியதால் 4 பேரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் தாங்களே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
பிஎஸ்சி வேதியியல் படிப்பில் பல்கலைக்கழக அளவில் 2022ம் ஆண்டு கோல்டு மெடல் வாங்கிய நண்பரான ஞான பாண்டியனை இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என கிஷோர் கூறியுள்ளார்.
இதனையடுத்து சவுக்கார் பேட்டையில் உள்ள கெமிக்கல் கடையில் போதைப்பொருள் தயாரிக்க தேவையான கெமிக்கல் பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.
அதன் பின்னர் பீரவின் வீட்டில் ஆய்வகம் நடத்தி மெத்தம்பெட்டமைன் தயாரிக்கும் முறையை சோதனை செய்தனர். அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூண்டோடு அனைவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்பதும் 3 பேர் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.
7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கிஷோரின் தந்தை கதிரவன் மீஞ்சூர் ஒன்றிய திமுக கவுன்சிலராகவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.