‘டார்ச்சர் தாங்க முடியல…’ வீடியோ வெளியிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

1211

கர்நாடக மாநிலத்தில்..

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்னாவை சேர்ந்தவர் 31 வயதாகும் மாதுரி. நிதிமோசடி விவகாரம் தொடர்பாக அண்மையில், சன்னப்பட்னா புறநகர் காவல் நிலையத்துக்கு இவர் புகாரளிக்க சென்றிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஷோபா மற்றும் காவலர்கள் தன்னுடைய புகாரை பெற மறுத்ததோடு, அவமானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் என பின்னர் வெளியிட்ட வீடியோ செய்தியில் மாதுரி தெரிவித்தார்.

தனது புகார் தொடர்பாக பலமுறை காவல்நிலையம் சென்ற தனக்கு ஏமாற்றமே கிடைத்ததாகவும், சன்னப்பட்னா காவல்நிலைய போலீஸார் தன்னை மோசமாக துன்புறுத்தியதாகவும் அந்த வீடியோவில் மாதுரி தெரிவித்திருக்கிறார்.

போலீஸாரின் சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் எல்லை மீறியதால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும், தன்னுடைய இறப்புக்கு பின்னரேனும் தனக்கு நீதி கிடைக்குமா என்றும் மாதுரி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.


சனிக்கிழமை இரவு இந்த வீடியோ தகவலை பதிவு செய்த கையோடு, தூக்க மாத்திரைகளை விழுங்கி அவர் தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த மாதுரி ஞாயிறு அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மாதுரியின் இறப்பை அடுத்து அவரது மொபைலில் இருந்த வீடியோ செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து மாதுரியின் உறவினர்கள் சன்னப்பட்னா காவல்நிலையத்தை சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை உயரதிகாரிகள், ’மாதுரி மீது நிதிமோசடி தொடர்பான பல்வேறு புகார்கள் விசாரணையில் இருப்பதாகவும், தனக்கு எதிராக வழக்கு விசாரணை திரும்புவதை அடுத்து அவர் போலீஸாருடன் மோதல் போக்கை கொண்டிருந்ததாகவும்’ விளக்கினர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத மாதுரியின் உறவினர்கள், ’இல்லத்தரசியான மாதுரி அளித்த புகார் மற்றும் அவர் மீது சொல்லப்படும் புகார்கள் குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும் என்றும், மாதுரியை தங்கள் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டு பின்னர் டார்ச்சர் செய்து தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் போராடி வருகிறார்கள்.