செங்கல்பட்டு….

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர் – ஜெயந்திர சரஸ்வதி ஜெயராம் நகர் பகுதியில், அக்ஷயா ஹோம் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கருத்தோவியன் ( 55). இவரது மனைவி மஞ்சுளா வயது ( 50).

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கருத்தோவியன் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கருத்தோவியன் மற்றும் மஞ்சுளா ஆகிய தம்பதியினர் கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வங்கி மற்றும் மகளிர் சுய உதவி குழு ஆகிய கடன்களால் தொடர்ந்து இருவரும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் இடமும் பணக்கஷ்டம் குறித்து கூறிவந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி ஆகியும் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. வழக்கமாக காலை 7:00 மணிக்கு வீட்டிலிருந்து இருவரும் வெளியில் நடமாடுவது வழக்கம். ஆனால் காலை 10 மணி வரை திறக்கப்படாமல் இருந்த காரணத்தினால் கதவை சிலர் தட்டி உள்ளனர். தொலைபேசி மூலம் அக்கம்பக்கத்தினர் தொடர்பு கொண்ட பொழுதும் தொடர்ந்து ரிங் சென்று கொண்டே இருந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த பகுதியினர் இது குறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் கதவை உடைத்துப் பார்த்தபொழுது, இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு உண்மையன காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பிரச்சினையால் தம்பதி இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















