சென்னை..

சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் காலை பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் நடக்க கால் வைக்க கூட இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல். சாலை முழுவதும் வாகன கூட்டங்கள்.
சக்கரங்களில் பயணிப்பவர்கள் நடப்பவர்களை கண்டு நிதானிப்பதே கிடையாது. காலை நேர பரபரப்பில் 2 சக்கர வாகன ஓட்டிகளும் சந்து பொந்துகளில் புகுந்து முன்னால் செல்ல முயற்சித்துக் கொண்டே இருப்பர்.

இந்நிலையில் இன்று காலையில் தாயுடன் 2 சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
10 வயது சிறுமி கீர்த்தி தனது தாயுடன் வழக்கம் போல் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். காலையில் திருமண முகூர்த்தம், பள்ளி, அலுவலகம் செல்பவர்கள் என அனைவருமே விரைந்து கொண்டிருந்தனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சற்று தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தது. அப்போது பின்னால் அமர்ந்திருந்த கீர்த்தியும் விழுந்து விட்டார்.
வேகமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. தாய் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறியது. கதறித்துடித்த தாய் மகள் மீது லாரி ஏறி இறங்கியதை நேரில் கண்டதும் அதிர்ச்சியடைந்து அலறி துடித்தார்.

அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிவேகத்தில் செல்வது குறித்து ஏற்கனவே பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுவரை அதிகாரிகள் எந்தவிதநடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை அலுவல் நேரங்களில் மேடவாக்கம் பிரதான சாலையில் தண்ணீர் லாரிகள் வரக்கூடாது என்ற விதி அமலில் உள்ளது.

இந்நிலையில் விதியை மீறி தண்ணீர் லாரியை இயக்கியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.கைது செய்யப்பட்ட தண்ணீர் லாரி ஓட்டுநர் டேவிட் ராஜனிடம் விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்ற்று வருகிறது. இந்நிலையில் கவனக்குறைவாக விபத்தை ஏற்படுத்தியதாக 304 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.















