திருமணமாகாத ஆண்களை பேசியே மயக்கி சொகுசு வாழ்க்கை.. சிக்கிய இளம்பெண்!!

11402

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அசோக் சைத்தன்யா. ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார்.

33 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்ற வருத்தத்தில் இருந்துள்ளார் அசோக் சைதன்யா. பெற்றோரின் அறிவுறுத்தலின்படி தெலுங்கு மேட்ரிமோனியில் தனது சுய விவரத்தை பதிவேற்றம் செய்ததாகவும் தெரிகிறது.

அதே வலைதள பக்கத்திலிருந்த ஆந்திர மாநிலம் வெங்கட்ராமன் என்பவரின் மகள் ஷ்ரவண சந்தியா என்பவரை அசோக் சைதன்யாவுக்கு பிடித்து போக இருவரும் பேசி வந்தனர்.

இந்நிலையில் தனது புகைப்படம் எனக் கூறி சினிமா நடிகை ஒருவரின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார் சந்தியா. புகைப்படத்தை பார்த்து அழகில் மயங்கிய அசோக் சைதன்யா, சந்தியா கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார்.


பல தவணைகளில் 9 லட்சம் ரூபாய் பணத்தையும், 65 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் வாங்கி கொடுத்துள்ளார். நன்றாக பேசி வந்த சந்தியா, திருமணம் குறித்து பேசும்போது மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு அசோக் சைதன்யா வற்புறுத்த அவரது தொலைபேசி எண்ணை பிளாக் செய்துள்ளார். சந்தேகம் அடைந்த அசோக் சைதன்யா ஆவடி காவல் ஆணையரகத்தில் இணையவழி குற்ற பிரிவில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் சிக்னல் மூலம் பெங்களூருவில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் பதுங்கி இருந்த ஷ்ரவண சந்தியாவை கையும் களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து நடத்திய விசாரணையில், பலரை ஏமாற்றிய கில்லாடி ராணி இந்த சந்தியா என்பது தெரியவந்தது.

அதிக வயதாகியும் திருமணமாகாத ஆண்களை குறி வைத்து ஏமாற்றியிருக்கிறார் சந்தியா. மோசடி செய்து கிடைத்த பணத்தில் பெங்களூருவில் சொகுசாக வாழ்க்கை நடத்தியுள்ளார்.

அவர் தங்கியிருந்த அறையில் இருந்து 1 மடிக்கணினி, 3 செல்போன்கள், 6 சிம் கார்டுகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.சந்தியா மோசடிக்கு பயன்படுத்திய எட்டு மின்னஞ்சல் மற்றும் டெலிகிராம் பக்கத்தையும் போலீசார் முடக்கி உள்ளனர்.

பெங்களூருவில் திருமணமான ஆண்கள் பலரையும் சந்தியா ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஷ்ரவண சந்தியாவிடம் பணத்தை இழந்தவர்களின் தகவல்களை திரட்டும் பணியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.