கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் வசித்து வருபவர் 25 வயது சௌமியா. இவர் நர்சிங் படித்து வந்தார். அதுபோல் சிவமொக்கா மாவட்டம் சாகரில் வசித்து வருபவர் 28 வயது ஸ்ருஜன். இவர் தீர்த்தஹள்ளியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கடன் வாங்கிய கொப்பாவை சேர்ந்தவர்களிடம் பணம் வசூலிக்க அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது சௌமியாவுடன் ஸ்ருஜனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் இரண்டரை ஆண்டுகள் காதலித்து வந்தனர் . வேற்று ஜாதி என்பதால் ஸ்ருஜனின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சவுமியாவிடம் பேசுவதை ஸ்ருஜன் தவிர்த்து வந்துள்ளார்.
இருப்பினும் சவுமியா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஸ்ருஜனை அடிக்கடி வலியுறுத்தினார். ஜூலை 2ம் தேதி சௌமியா தீர்த்தஹள்ளிக்கு சென்று ஸ்ருஜனை சந்தித்துள்ளார். அப்போது தன்னை இப்போதே திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நான் எனது வீட்டுக்கு செல்ல மாட்டேன் என சவுமியா, ஸ்ருஜனிடம் அடம்பிடித்துள்ளார். அதற்கு ஸ்ருஜன் நான் திருமணம் செய்து கொள்ள முடியாது. நீ உனது வீட்டுக்கு செல். எனது வீட்டுக்கு வர வேண்டாம் என கூறி சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போது சவுமியா காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் என்னை ஏமாற்றுகிறாயா என கூறி தகராறு செய்தார். வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் ஸ்ருஜன், சவுமியாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருஜன், சவுமியாவின் உடலை சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆனந்தபுரம் அருகே மும்பாலு கிராமத்தில் குழி தோண்டி புதைத்து விட்டார்.
எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து சென்றுள்ளார். இதற்கிடையே சவுமியா வீடு திரும்பாததால் தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணையில், சவுமியா, ஸ்ருஜனை காதலித்து வந்தது தெரியவந்தது. உடனே சாகருக்கு கொப்பா போலீசார் விரைந்து சென்று ஸ்ருஜனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் தான், வீட்டை விட்டு வெளியேறி வந்து திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சவுமியாவை, ஸ்ருஜன் கழுத்தை நெரித்து கொன்று, உடலை புதைத்த கொடூரம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ருஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.