கன்னியாகுமரி…

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (32). இவர் குளச்சல் சுனாமி காலனிப் பகுதியில் புரோட்டா கடை நடத்தி வந்தார். அப்போது இரையுமன்துறை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஒருவரின் மனைவி பிரபுஷா (23) என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பிரபுஷாவுக்கு இரண்டரை வயதில் ஒரு மகனும், 15 மாதங்களான ஒரு மகனும் இருந்தனர். பிரபுஷா தன்னுடைய குடும்பத்துடன் தூத்தூரில் வாடகைக்கு வசித்துவந்தனர். அவரின் கணவர், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால், வீடு திரும்ப ஒருமாதம் வரை ஆகும்.

இந்த நிலையில் புரோட்டா கடை நடத்தி வந்த சதாம் உசேனுக்கும், பிரபுஷாவுக்குமான பழக்கம், திருமணம் மீறிய உறவாக மாறியிருக்கிறது. அதையடுத்து பிரபுஷா தன்னுடைய 15 மாத குழந்தையை அழைத்துக்கொண்டு, கடந்த ஜூலை மாதம் சதாம் உசேனுடன் சென்றுவிட்டார்.

சதாம் உசேனும், பிரபுஷாவும் மயிலாடி பகுதியில் ஒரு கோழிப் பண்ணையில் தங்கி, வேலைசெய்து வந்தனர். இந்த நிலையில், பிரபுஷாவின் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு சென்றிருக்கின்றனர்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். மேலும், குழந்தையின் முகம் உள்ளிட்ட இடங்களில் சந்தேகத்துக்கிடமாக தளும்புகள் இருந்திருக்கின்றன.

அதைப்பார்த்த மருத்துவர்கள், சந்தேகத்தின்பேரில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் புறக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் பிரபுஷா, சதாம் உசேன் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

சதாம் உசேனும், பிரபுஷாவும் இரவு நெருக்கமாக இருந்த சமயத்தில் குழந்தை அழுததாகவும், அப்போது சதாம் உசேன் போதையில் இருந்ததால், தொந்தரவு செய்வதாகக் கூறி குழந்தையை அடித்துக் கொன்றதும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில், “பிரபுஷாவுடன் ஒன்றாக வசித்து வரும் சதாம் உசேனுக்கு ஏற்கெனவே மூன்று திருமணங்கள் ஆகியிருக்கின்றன. அவர்களின் முறைப்படி `முத் தலாக்’ கூறி, திருமண உறவை முறித்திருக்கிறார் சதாம் உசேன். நான்காவதாக பிரபுஷாவைத் திருமணம் செய்வதாகக் கூறி, அவருடன் சேர்ந்து வசித்து வந்திருக்கிறார்.

இருவரும் சேர்ந்து இருந்த சமயத்தில், குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், எரிச்சலடைந்து அடித்துக் கொடூரமாகக் கொலைசெய்திருக்கின்றனர். பேச்சு மூச்சில்லாமல் இருந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல், மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கின்றனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.















