இந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் புதுமாப்பிள்ளை கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென்று மரணமடைந்தார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு உறுதியானதாக பாட்னா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சோதனையை மேற்கொண்டதில், 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பீஹாரில் முதன்முறையாக கொரோனா தொற்று அதிகம் பேருக்கு பரவிய முதல் நிகழ்வு இதுவாகும். மணமகனின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காமல் தகனம் செய்துவிட்டதால், மணமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.
இது குறித்து பொலிசார் கூறுகையில், 30 வயதான மணமகன் மே 12-ஆம் திகதி தன்னுடைய திருமணத்திற்காக தீபாலி கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது.
ஆனால் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, மணமகனின் உடல்நிலை மோசமடையவே, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இளைஞர் உயிரிழந்த விவகாரத்தை அறிந்த மாவட்ட அதிகாரிகள், திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
அதில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மணப்பெண்ணுக்கு கொரோனா இல்லையென முடிவுகள் வந்துள்ளது.
கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தும், தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்றாமல், 50-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்க குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.