திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை.. குற்ற உணர்ச்சியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

735

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த துத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நிவேதா (19). இவர் 12ஆம் வகுப்பு வரை படித்திருந்த நிலையில், இவரது உறவினரான அமிர்தகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்தாண்டு புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ஓடி வந்து தனது காதலன் அமிர்தகுமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணத்திற்கு நிவேதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த,

தண்டல்கழனி பட்டுக்கோட்டை அழகிரி தெருவில் வசித்து வந்தனர். அமிர்தகுமார் டிடிஎச் டிஷ் அமைக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நிவேதா 9 மாதங்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.


கடந்த 30-ஆம் தேதி இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள். திருமண நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக அமிர்தகுமாரின் சகோதரி மெர்சி 30-ஆம் தேதி மாலை இவர்களது வீட்டிற்கு வந்த போது நிறைமாத கர்ப்பிணியான நிவேதா தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், நிவேதாவை மீட்டு பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே நிவேதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய செங்குன்றம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுவதற்காக தமது கணவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என நிவேதா கூறியுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் தற்போது வெளியே சென்று கொண்டாட வேண்டாம் எனவும் குழந்தை பிறந்த பிறகு கொண்டாட்டங்களை பார்த்து கொள்ளலாம் எனவும் மனைவியை சமாதானம் செய்து விட்டு அமிர்தகுமார் வேலைக்கு சென்றுள்ளார்.

தன்னுடைய முதல் திருமண நாள் ஆசையை நிறைவேற்றாமல் அமிர்தகுமார் வேலைக்கு சென்றதால் விரக்தியில் இருந்த நிறைமாத கர்ப்பிணி நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நிவேதாவின் சகோதரி மேகலை (26) தமது தங்கையின் கணவர் அமிர்தகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும், தமது தங்கையுடன் அடிக்கடி சண்டை போடுவார் எனவும், தங்கையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின் பேரில்,

செங்குன்றம் காவல்துறையினர் ஐபிசி 174(3) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 7ஆண்டிற்குள் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியர் அளவிலான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே கடந்த 3 நாட்களாக தமது கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் அமிர்தகுமார் மனமுடைந்து விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. திருமண நாளில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருந்தால்,

தமது கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்து சம்பவம் நடைபெறாமல் இருந்திருக்குமே என எண்ணி எண்ணி குற்ற உணர்ச்சியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அமிர்தகுமாரின் நண்பர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக வந்த போது

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்தபோது அமிர்தகுமார் தூக்கிட்டு நிலையில் தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர் செங்குன்றம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் அமிர்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.