தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (42). கூலித் தொழிலாளியான இவருக்கு சசிகலா (34) என்ற மனைவியும், பிரிதிக்ஷா (9) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், திருமலைசாமிக்கும், சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. அதன்பின், தீபாவளி அன்று மதியம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கணவர் திருமலைச்சாமி கையில் இருந்த கம்பால் மனைவி சசிகலாவை அடித்துள்ளார்.
இதனால் சசிகலா மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சசிகலாவை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சசிகலாவின் தாயார் பார்வதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் திருமலைசாமியின் மனைவி சசிகலா பல் கட்டி இருப்பதாகவும், கணவன் அடித்ததால் வாயில் இருந்த பல்செட் கழன்று தொண்டையில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து திருமலைச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.