நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை: சல்மான் கான் விடுத்துள்ள வேண்டுகோள்!!

891

இளம் பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பொலிவூட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.

மேலும்,சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரண் ஜோஹர், சல்மான் கான் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிக்கும் சம்பவங்களும் இடம்பெற்றன.


சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக சுஷாந்த் சிங் ரசிகர்கள், முன்னணி நடிகர்கள் பலரையும் திட்டித் தீர்த்து வருகிறார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

தற்போது சுஷாந்த் சிங் ரசிகர்களின் செயல்பாடுகள் தொடர்பாக சல்மான் கான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

“என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். சுஷாந்த் ரசிகர்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள். அவர்களது சாபங்களையும் வார்த்தைகளையும் கணக்கில் கொள்ளாமல் அதன் பின்னால் இருக்கும் உணர்வைப் பாருங்கள்.

நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு மிகவும் வலிமிக்கது என்பதால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆதரவு தந்து அவர்களுடன் உறுதுணையாக நில்லுங்கள்” இவ்வாறு சல்மான் கான் தெரிவித்துள்ளார்.