நள்ளிரவில் காதலியை பார்க்க சுவர் ஏறி குதித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

961

தமிழகத்தில் காதலியைப் பார்ப்பதற்கு நள்ளிரவில் காதலன் சுவர் ஏறி குதித்ததால், அவர் 75 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஜிலான் என்னும் 22 வயது இளைஞர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கடைக்கு வரும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் கடைகள் திறக்கப்படாததால் காதலியை பார்க்க முடியாமல் ஜிலான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஜிலான், திடீரென காதலியின் வீட்டருகே வந்தபோது அவருக்கு காதலியின் ஞாபகம் வந்துள்ளது. இதனால் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சிசெய்தபோது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து திருடன் என நினைத்து கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் பீதியில், ஜிலான் அங்கிருந்து தப்பித்து ஓட நினைத்து, இரவு நேரத்தில் கிணறு இருப்பது தெரியாமல், 75 அடி ஆழமுள்ள பராமரிக்கப்படாத கிணற்றில் விழுந்து வசமாக சிக்கிக்கொண்டார்.


கிணற்றில் தண்ணீர் ஏதும் இல்லாமல் வறண்டு போயிருந்ததால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. கிணற்றில் இருந்து தப்பிப்பதற்காக சத்தம்போட்டு உதவி கேட்டுள்ளார்.

காதலனின் கூச்சலை கேட்ட காதலி மற்றும் அவரின் பெற்றோர் வந்து பார்க்கும்போது ஜிலான் பராமரிப்பு இல்லாத பாழுங் கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஜில்லானை கிணற்றில் இருந்து மீட்டனர். உடலில் அதிகமான உள்காயங்களுடன் மீட்கப்பட்ட ஜிலான் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.