அரசியலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் மகாராஷ்டிராவில் வேலையை இழந்து வாடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார் நடிகர் சோனு சூட். இந்நிலையில் ஆளும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் சோனு சூட்டை கடுமையாக தாக்கி எழுதியிருந்தனர். அவரது நடிவடிக்கைகளுக்கு பின்னால் பாஜக இருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் தனக்கும், அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான அன்பின் காரணமாக உதவி செய்து வருவதாகவும் சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார். அவர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் இணைவதற்கு உதவி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 20,000 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப உதவி செய்துள்ளதாகவும், கடைசி தொழிலாளி ஊர் திரும்பும் வரை தனது பணி தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘யாரும் தங்க இடம் இல்லாமல் தவிக்கக் கூடாது. அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிசெய்வது நமது கடமை. நானும் மும்பைக்கு பல கனவுகளுடன் புலம்பெயர்ந்து வந்தேன். அதனால் அவர்களது வலி எனக்கு நன்றாக புரிகிறது. தொழிலாளிகள் நடைபயணமாக செல்வதை பார்க்கும்போது மனம் வலிக்கிறது. அவர்களை பார்க்கும்போது எனது ஆரம்ப கால வாழ்க்கை பயணம் நினைவுக்கு வருகிறது. நானும் பல இன்னல்களை கடந்து இந்த நிலையை அடைந்துள்ளேன். வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவி கேட்டு தொழிலாளர்கள் என்னை அணுகுகின்றனர். என் மேல் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் அனைத்து மாநிலங்களிலும் அனுமதி வாங்குவது எளிதான காரியமாக இருப்பதில்லை. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும்’ என்றும் சோனு சூட் வலியுறுத்தியுள்ளார்.















