திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு (21). பட்டியலின இளைஞரான இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நர்மதா என்ற பெண் காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நர்மதா, காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து, தங்கள் மகளைக் காணவில்லை என நர்மதாவின் பெற்றோர், அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி, காதல் ஜோடியை கடந்த டிசம்பர் 7ம் தேதி வாணியம்பாடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் நர்மதா கணவருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து, அவர் மேஜர் என்பதால், கணவருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், நர்மதாவின் குடும்பம் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என கூறப்பட்ட நிலையில், இருவரும் வெளியூர் சென்று வசித்து வந்தனர். இந்த சூழலில் நர்மதாவின் உறவினர்கள் தியாகுவையும், நர்மதாவையும் தீவிரமாகத் தேடியுள்ளனர். இது குறித்து அறிந்த இருவரும், 2 வாரங்களுக்கு முன்பு தங்கள் சொந்த ஊரான சங்கராபுரத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தியாகு வீட்டிற்கு வந்த நர்மதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தியாகுவையும் அவரது பெற்றோரையும் தாக்கிவிட்டு, நர்மதாவை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தியாகு அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தனது மனைவி நர்மதாவை அவரது தந்தை ராஜேந்திரன், அண்ணன்களான கோவிந்த ராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் ஈச்சங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை ஆகியோர் காரில் கடத்திச் சென்று விட்டனர்.

மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை உடனடியாக கண்டுபிடித்துத் தர வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், நர்மதாவை கடத்திச் சென்ற அவரது தந்தை, அண்ணன் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், சங்கராபுரம் பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.















