புதுக்கடை அருகே பணம், நகைக்கு ஆசைப்பட்டு தனது அண்ணியை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்து கொலை செய்த கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கடை அருகே உள்ள முள்ளங்கினாவிளையை சேர்ந்தவர் ஜோஸ். இவரது மனைவி கவிதா (25). ஜோஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இதனால் கவிதா முள்ளங்கினாவிளையிலும், தனது தாயார் ஊரான பூட்டேற்றியிலும் மாறி, மாறி வசித்து வந்தார்.
இந்த நிலையில் குடும்ப தேவைக்காக தனது நகைகளை கவிதா, தனியார் வங்கியில் அடகு வைத்து இருந்தார். இந்த நகைகளை மீட்பதற்காக வெளிநாட்டில் இருந்து கணவர் அனுப்பி வைக்கும் பணத்தை அவ்வப்போது செலுத்தி வந்தார்.
இதை அறிந்த கவிதாவின் கணவர் ஜோசின் தம்பி சசிகுமார் எப்படியாவது, கவிதாவை ஏமாற்றி நகை, பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2.12.2011 அன்று கவிதா, தனது கணவர் அனுப்பி இருந்த பணத்தின் மூலம் அடகில் இருந்த நகைகளை முழுமையாக திருப்பினார்.
பின்னர் அந்த நகைகள் மற்றும் மீதி பணத்துடன் கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றியில் இருக்கும் தனது தாயார் வீட்டுக்கு செல்வதற்காக கருங்கல் வந்த அவர், கருங்கல் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்.
இது பற்றி அறிந்த சசிக்குமார் தனது காரில் அங்கு வந்தார். அவர் தனது அண்ணி கவிதாவிடம், பூட்டேற்றி அழைத்து செல்வதாக கூறி காரில் அழைத்து சென்றார். சசிக்குமாருடன் காரில் வருவதாக தனது தாயாரிடமும் கவிதா தெரிவித்து இருந்தார்.
ஆனால் சசிக்குமார் பூட்டேற்றி செல்லாமல் நாகர்கோவில் நோக்கி காரில் வந்தார். இதை அறிந்த கவிதா, என்னை எங்கு அழைத்து செல்கிறாய் என கேட்டு காரில் இருந்தவாறு சசிக்குமாருடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது சசிக்குமார் கவிதாவை தாக்கி, பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இதற்கு கவிதா உடன்படாததால் அவரது கழுத்தை நெரித்தும், தலையை இடித்தும் தாக்கினார். இதில் கவிதா உயிரிழந்தார்.
பின்னர் அவரது நகை, பணத்தை எடுத்துக் கொண்டு, கவிதாவின் உடலை ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி சுடுகாட்டு பகுதியில் வீசி விட்டு சென்றார். அவர் வாங்கி இருந்த காய்கறிகள், மீன்கள் உடல் அருகே கிடந்தன.
மறுநாள் சம்பவ இடத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் அறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் இது பற்றி விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரய்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில் சசிக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் கூறுகையில், இந்த வழக்கில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். தேவையான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் கிடைத்த சில தடயங்களும் விசாரணைக்கு உதவின என்றார்.