திருச்சி மாவட்டம் துறையூர் ரெங்களாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 24 வயது தினேஷ். இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தில் வசித்து வரும் சௌந்தர்யாவை 5 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது.இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த தினேஷ், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்தார்.
அப்போதுதான், வள்ளி என்ற பெண்ணுடன் தினேஷுக்கு நெருக்கம் ஏற்பட்டு, முதல் மனைவிக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்துள்ளார். இப்போது வள்ளிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சென்னையிலிருந்து பெரம்பலூர் வந்த தினேஷ் மினி பஸ் ஒன்றில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். பேருந்தில் பயணம் செய்த மாணவி ரம்யாவை காதலித்து 3 வதாக திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் 2 வாரங்களுக்கு முன்புதான் நடந்தது.
புது மனைவி ரம்யா மீதுள்ள காதல் மோகத்தால், தான் திருமணம் செய்து கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து My pondatti I Love you dee Chellam… மை பொண்டாட்டி ஐ லவ் யூடி செல்லம் என பதிவிட்டுள்ளார் தினேஷ்.
இதை பார்த்து டென்ஷனான முதல் மனைவி சௌந்தர்யா, தினேஷை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளார்.. போலீசுக்கு போவதாகவும் கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டு பயந்துபோன தினேஷ், செல்போன் தொடர்பை துண்டித்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதன் பிறகு செளந்தர்யா, தினேஷின் 3வது மனைவியான ரம்யாவை தேடிச்சென்றுபார்த்த போது தான் தினேஷ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதை ரம்யா உணர்ந்துள்ளார்.
மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததில் “என்னை திருமணம் செய்து, 3 வயதில் குழந்தை உள்ளபோது, கணவர் தினேஷ் என்னை ஏமாற்றிவிட்டு வேறு 2 பெண்களை திருமணம் செய்துள்ளார்.. மேலும் என்னிடம் விவாகரத்து கேட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று தெரிவித்தார்.
இந்த புகாரின் பேரில் தினேஷை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்ட பெரம்பலூர் மகளிர் போலீஸார், கொலை மிரட்டல் விடுதல் (351 – (2) ), ஏமாற்றுதல் 318.
சட்டத்திற்கு புறம்பாக 2 வது திருமணம் செய்தல் 82, ஆபாசமாக திட்டுதல் 296, மற்றும் தாக்குதல் செய்தல் 115, உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த 3 பேரையும் தினேஷ் திருமணம் செய்து ஏமாற்றியதுடன், பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியிருக்கிறாராம். எனவே, தினேஷால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இருப்பதாக தெரிகிறது.
இதில் சென்னையில் தினேஷ் திருமணம் செய்த வள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாம். தினேஷின் 3வது மனைவியான பட்டதாரி பெண்ணான ரம்யா, தினேஷுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கிறார்கள் என கூறியும் கேட்கவே இல்லை. வாழ்ந்தால் தினேஷோடுதான் என பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால், ரம்யாவின் பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.