உஷார் மக்களே… இப்படியெல்லாம் கூட மரணம் சம்பவிக்குமா என்று பதற செய்கிறது. பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற செல்போன்களை வாங்காதீங்க.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த ஒட்டப்பாலத்தை சேர்ந்தவர் ரஜினி. பரமக்குடியில் உள்ள வங்கி ஒன்றில் காவலாளியாக வேலைப் பார்த்து வந்த ரஜினி, பரமக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் மதுரை வரை சென்று விட்டு, மீண்டும் பரமக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கமுதக்குடி பகுதியில் ரஜினியின் இருசக்கர வாகனம் சென்றுக் கொண்டிருந்த போது, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது.
பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் கவனம் சிதறிய ரஜினி, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். ரஜினி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நிலையில், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நண்பர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனத்தை ஓட்டிச் சென்ற ரஜினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.