மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி மரணம்!!

535

கேரள மாநிலம் மலப்புரத்தில் மகளின் திருமணத்துக்கு முந்தைய நாள், கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். மலப்புரத்தில் உள்ள தனலூரைச் சேர்ந்தவர் சாய்னாபா (44). இவரது மகள் கைருனீசாவின் திருமணம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெறவிருந்தது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த சாய்னாபா, வெள்ளிக்கிழமை மாலை உறவினர்களுடன் டீ மற்றும் கப்கேக் சாப்பிட்டுள்ளார்.

அப்போது சாய்னாபாவின் தொண்டையில் கப்கேக் மாட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்த பின்னர், மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் சாய்னாபாவை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே அவரது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டதாகவும், உணவுத் துகள்கள் சுவாசக் குழாய் முழுவதும் அடைத்திருந்ததால் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே சாய்னாபாவின் மகளின் திருமணத்துக்கான ஒப்பந்தத்தை மட்டும் திட்டமிட்டபடி சனிக்கிழமை உறவினர்கள் நடத்தினர். திருமணத்துக்கான மற்ற கொண்டாட்டங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது.