சிவகங்கை…

மது குடிக்க பணம் தர மறுத்த ஆத்திரத்தில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த அரசினம்பட்டி ஊரைச் சேர்ந்தவா் செல்வம் (வயது 54). இவர் சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட செல்வம், சொந்த ஊருக்க வந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

செல்வத்துக்கு ஒரு மகள், மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தின் மூலம் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இரண்டாவது மகனான முகுந்தனை (வயது 22) என்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார்.

ஆனால் முகுந்தனுக்கு படிக்கும் போதே குடி பழக்கம் இருந்து உள்ளது. இதை அறிந்த செல்வம் மகனை கண்டித்துள்ளார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. தற்போது படிப்பை முடித்த முகுந்தன் கட்டட வேலை செய்து வருகிறார்.

இந்த சூழலில் நேற்று வேலையை முடித்து வந்த முகுந்தன் வீட்டின் மாடியில் இருந்து மது அருந்தி உள்ளார். அப்போது கூடுதலாக மது வாங்குவதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் செல்வம் தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முயன்ற தனது தாயயையும் முகுந்தன் தள்ளிவிட்டு உள்ளார்.

இதனை அடுத்து சண்டையை தடுத்து நிறுத்துவதற்காக அருகில் உள்ளவர்களை அழைத்து வருவதற்காக முகுந்தனின் தாய் சென்றுள்ளார். இந்த சமயத்தில் முகுந்தன், தான் அணிந்திருந்த பனியனைக் கழற்றி தந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முகுந்தனை கைது செய்தனர். மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.















