உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பிரசவத்தில் இறந்துவிட்டதாக நினைத்து உறவினர்கள் இறுதிச்சடங்கு நடத்தி பெண்ணின் உடலை தகனம் செய்தனர். சாம்பலை கரைக்க தகனம் செய்த இடத்தில் இருந்து சாம்பலை சேகரித்தனர்.
அப்போது கத்தி ஒன்று கிடைத்தது. அதாவது, அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பயன்படுத்திய கத்தி கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதாவது அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் தவறுதலாக வயிற்றில் கத்தியை வைத்ததால் அந்த பெண் உயிரிழந்ததாகவும், தற்போது தகனம் செய்யும் போது கத்தி வெளியே வந்ததாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.