மாமியார், நாத்தனார் தான் காரணம்… வீடியோ வெளியிட்டு இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

1029

நாமக்கல்..

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் ராகவேந்தர் -அபிராமி(31) தம்பதி வசித்து வந்தனர். ராகவேந்தர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். அபிராமி பொறியியல் பட்டதாரி ஆவார்.

இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில், திருமணமான சில தினங்கள் முதலே ராகவேந்தர் தாய் மற்றும் சகோதரி இருவரும் சேர்ந்து அபிராமிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கூடுதல் வரதட்சணை கேட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அபிராமி தனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தந்தை வீட்டிலிருந்து கொண்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இதையடுத்து நேற்று வேலைக்குச் சென்ற அபிராமி, ‘உடல் நலம் சரியில்லை வீட்டிற்குச் செல்வதாக’ கூறி கணவர் வீட்டிற்குச் சென்றதாகத் தெரிகிறது.


இந்நிலையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அபிராமி குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைகேட்டு அபிராமி பெற்றோர் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அபிராமி சடலத்தை கண்டு அவர்கள் கதறி அழுதனர்.

இதன் பின்னர் கணவர் ராகவேந்தர் குடும்பத்தினர் தான் மகள் அபிராமி மரணத்துக்கு காரணம் எனவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அபிராமியின் தந்தை, சகோதரி உட்பட உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈரோடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பள்ளிபாளையம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து உறவினர்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதற்கிடையே அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது இறப்பிற்குக் கணவரின் தாய் மற்றும் சகோதரி தான் காரணம் எனக்கூறி வெளியிட்ட வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது.

அபிராமி பேசும் வீடியோ தற்போது இணையத்திலும் பரவியுள்ளளது. இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா மருத்துவமனையில் இருதரப்பு குடும்பத்தினர் மற்றும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அபிராமி பேசிய வீடியோ பதிவினை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் காவல்துறையினர் கணவர், மாமியார், நாத்தானார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.