தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் மதுகர் ரெட்டி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் மதுமிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளில் 2 குடும்பத்தினரும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் கேக் வெட்டி ஊட்டி சிரித்துக் கொண்டே போட்டோ ஷூட் நடத்தினர்.
விடிந்தால் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மதுகர் ரெட்டி காணாமல் போய்விட்டார். உறவினர்கள் அனைவரும் பலரும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதற்கிடையே மதுகர் ரெட்டி வேறு ஒரு பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு அந்த போட்டோவை பெற்றோருக்கு அனுப்பி வைத்தார்.
தனது காதலியை திருமணம் செய்து கொண்டதாக கூறியதால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.
திருமண நிச்சயதார்த்தம் நடந்த போது மணமகள் குடும்பத்தினர் 40 லட்சம் மதிப்பில் நிலம், 15 பவுன் தங்க நகை, 6 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.
உடனடியாக அதனை திருப்பித் தர வேண்டும் என மணமகள் குடும்பத்தினர் கூறிவிட்டனர்.
மதுகர் ரெட்டியின் தந்தை ஸ்ரீநிவாஸ் ரெட்டி தனது மகனுக்கு ஆதரவாக பேசி பணத்தை திரும்பத் தர முடியாது என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டார். மதுமிதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் தலைமறைவான மதுகர் ரெட்டியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.