வெளிநாட்டில் இருந்து பரிசு பொருள் அனுப்புவதாக மோசடி : விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

645

சென்னை….

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் அஸ்வினி. இவர் BBA படிப்பை முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், பியூட்டிசனுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை சமூக வலைதளங்களில் தேடி வாங்கி வந்துள்ளார்.

அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலமாக லண்டனில் வேலை பார்ப்பதாக கூறி ஒரு நபர் அறிமுகமாகி நட்பாக பேசி வந்துள்ளார்.

சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான நபர் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு அஸ்வினியை மிகவும் பிடித்திருப்பதாக கூறியதுடன், தமிழ்நாடு திரும்பியவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.


இதனையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக லண்டன் மாப்பிள்ளை ஒத்து வராது என நினைத்து அஸ்வினி அந்த நபரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து அஸ்வினிக்கு வாட்ஸ் அப் காலில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அஸ்வினியை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் உங்களுக்கு 15,000 அமெரிக்கா டாலர் பரிசாக அனுப்பி இருப்பதாகவும், சென்னையில் சுங்கத்துறை அலுவலகத்தில் அந்த பார்சல் இருப்பதாக கூறியுள்ளார். பணம் செலுத்தினால் அந்த பார்சல் உங்கள் வீட்டுக்கு வந்து விடும் என ஆசை வார்த்தை கூறிய அந்த நபர், வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

மேலும் பணம் செலுத்தவில்லை என்றால் பெறுநர் முகவரியில் உங்கள் பெயர், விவரம் உள்ளதால், வெளிநாட்டு போலீசார் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன், உங்களை கைது செய்து விடுவார்கள் என அஸ்வினியை அந்த நபர் மிரட்டியுள்ளார்.

சிறிது நேரத்தில் மர்ம நபரே சுங்கத்துறை அதிகாரி போல வேறொரு எண்ணில் இருந்து அஸ்வினியிடம் பேசி கிப்ட் பார்சலுக்கு 45,000 ரூபாய் வரி செலுத்தவில்லை என்றால் உங்களை கைது செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் தெரிய வருகிறது.

இதனால் பயந்த அஸ்வினி 2 தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு 25,000 ரூபாயை அனுப்பிய வைத்துள்ளார். மேலும் 45,000 ரூபாய் கேட்டு அந்த நபர் அஸ்வினிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்து வேறு வழியின்றி நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தொடர்பாக அஸ்வினியின் பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தலைமைச் செயலக காலனி போலீசார் உயிரிழந்த அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இளம் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், அஸ்வினி அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்து தற்கொலை செய்து கொண்டதாகவும்,

தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதியுள்ளார். மேலும், ”ஐ மிஸ் யூ” அம்மா என அஸ்வினி தற்கொலைக்கு முன்பு கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.