வெளிநாட்டில் உயிரிழந்த தமிழர்! சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிய நபர்: குடும்பத்தினர் உருக்கம்!!

464

குடும்பத்தினர் உருக்கம்……..

வெளிநாட்டில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதற்கு, உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தருக்கு, அவரின் குடும்பத்தினர் உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின், பெரம்பலூர் அருகே கல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் விஜயக்குமாருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், கடந்த 4-ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதால், கடும் துயரமடைந்த அவர்கள், அவரின் உடலை எப்படி சொந்த ஊருக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.


அப்போது விஜயகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள், உயிரிழந்த விஜயகுமாரின் உடலை இந்தியா கொண்டு வர உதவிடுமாறு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து, துபாயில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட பாரிவேந்தர், விஜயகுமாரின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சி மேற்கொண்டார்.

அதன் பயனாக, 11 நாட்களுக்கு பிறகு, உயிரிழந்த விஜயகுமாரின் உடல் தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான‌ கல்பாடி எறையூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக‌ள் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு, விஜயகுமாரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.