வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை… 22 வயதில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்!!

1496

தமிழகத்தில்..

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய பகுதியில் சாலை குண்டும், குழியுமாக இருந்த காரணத்தால் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (22) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி ஹரிஷ் (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருகின்றனர். ஷோபனாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், வீட்டிற்கான அனைத்து பணிகளையும் ஷோபனா செய்து வந்துள்ளார்.


தினமும் தன் தம்பியை பள்ளியில் விட்டு விட்டு, வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை தன் இருசக்கர வாகனத்தில் தம்பியை ஷோபனா பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயில் அருகே சென்ற போது, எதிரே வந்த வேன், இருசக்கர வாகன கைப்பிடி மீது உரசியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி ஏறி இறங்கியதில், ஷோபனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த பகுதியின் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பொலிசார், விபத்து ஏற்படுத்திய வேன் மற்றும் லொறி ஓட்டுனர்கள் மோகன், பார்த்திபன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்த சாலை முறையாக பராமரிப்பு இன்றி உள்ளதால், நெடுஞ்சாலைத்துறையினர் சேதம் அடைந்து கிடக்கும் இந்த சர்வீஸ் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக Zoho நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, எங்கள் பொறியாளர்களில் ஒருவரான ஷோபனா இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது சென்னை மதுரவாயல் அருகே குண்டும் குழியுமான சாலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நமது மோசமான சாலையால் ஷோபனாவை அவரது குடும்பமும் Zoho நிறுவனமும் இழந்துவிட்டது என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நடப்பதற்கு காரணமாக இருந்ததோடு தங்கள் பணிகளில் மெத்தனமாக செயல்பட்ட அலுவலகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சி, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.