ஹத்ராஸ் சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கில் கூடிய உயர் சாதி ஆண்கள்!

491

ஹத்ராஸ்……

ஹத்ராஸ் பகுதியில் தலித் சமூகத்தை சார்ந்த இளம் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த குற்றம் தொடர்பாக காவல்துறையினர் கைது செய்துள்ள நான்கு பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உயர் சாதியினர் காவல்துறையினரை வலியுறுத்தியிருந்ததால் பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினை சந்தித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உயர் சமூகத்தினர் செயல்படுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிக எண்ணிக்கையில் மக்கள் திரளை கூட்டியதற்காக ஆசாத் மீதும் அவரது ஆதரவாளர்கள் 400 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவினை செய்துள்ளனர்.

ஆனால், பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான நான்கு நபர்களுக்கு ஆதரவாக தாகூர் சமூகத்தினர் பெருங்கூட்டமாக கூடியிருந்தனர்.


மாநில காவல்துறையினர் இவர்களுக்கு எதிராக ஒரு வழக்கைக்கூட பதிவு செய்யவில்லை.

“ராஷ்டிரிய சவர்ன் (உயர் சாதி) பரிஷத்” கூட்டத்தினை கூட்டிய அக்கிராமத்தின் உயர் சாதி ஆண்கள், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவர்களது குடும்பமும் பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதன் காரணமாக 4 உயர் சாதி ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சிபிஐ விசாரணையில் அனைவரும் உறுதியாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் ஆசாத்தினை நோக்கி, “சிபிஐ விசாரணையில் உங்களுக்கு நம்பிக்கையில்லை?” என்றும், ஆசாத் அரசியல் செய்யவே இங்கு வந்துள்ளார் என்றும் உயர்சாதி ஆண்களில் ஒருவர் கூறுகிறார்.

மேலும், ஹத்ராஸ் பகுதியிலிருந்து அவர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஆவேசமாக கத்துவதை சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில் காண முடிகின்றது.

உயிரிழந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் உத்தரப் பிரதேச காவல்துறை இந்த குற்றச்சாட்டினை மறுத்து, ஆக்ரா தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையை ஆதாரமாக மேற்கோள் காட்டியுள்ளது.

ஆனால், இந்த அறிக்கையின் மீது சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது சந்தேகத்தினை எழுப்பியுள்ளனர். இந்த அறிக்கை குற்றம் நடத்த 11 நாட்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.