திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (39). இவர் கடந்த 3 ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இதுகுறித்து கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், போலீஸார் விசாரணையில் மரடமடைந்த சுரேஷ், பூலாம்பட்டியில் கணவனை இழந்த உறவினர் பெண் மகேஸ்வரி (44) என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து சுரேஷ் உடனான தொடர்பை துண்டிக்குமாறு மகேஸ்வரியின் தம்பி கருப்புச்சாமி (36 ) என்பவர் கண்டித்து வந்துள்ளார். இதனை சுரேஷும், மகேஸ்வரியும் கேட்காமல் தொடர்பு வைத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி சுரேஷ் தனது நண்பர் பூலாம்பட்டியைச் சேர்ந்த சவரத் தொழிலாளியான மணிமாறன் (25) என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திய பின் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் சுரேஷை,

பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுரேஷின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மதுவில் விஷம் கலந்து குடித்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷுடன் வாழ்ந்துவந்த மகேஸ்வரி, சுரேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கீரனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ் உடன் தொடர்பை கைவிட மறுத்த மகேஸ்வரியின் மீது ஆத்திரம் கொண்ட, அவரது சகோதரர் கருப்புசாமி சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதன்படி சுரேஷின் நண்பரான மணிமாறனை வைத்து கருப்புசாமி மது பாட்டிலில் விஷம் கலந்து சுரேஸ்க்கு கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மகேஸ்வரியின் சகோதரர் கருப்புசாமி மற்றும் நண்பர் மணிமாறன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















