ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவரது மனைவி யாமினி( 20 ). இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் இன்று காலை சித்தேரி மாந்தோப்பு பகுதி பின்புறம் உள்ள கிணற்றின் அருகில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட வாலிபர் விக்னேஷின் சித்தி மகன் தம்பி முறையானவர் சதீஷ் (22). இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாக சித்தேரி விநாயகபுரத்தில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அண்ணன் உறவு முறையான விக்னேஷ் வீட்டுக்கு வந்து செல்லும்போது அண்ணி முறையான யாமினி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுநாளடைவில் கள்ளக்காதலாக மாறியது . இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி விக்னேஷுக்கு பிறந்தநாள் .
தங்களுடைய கள்ளக்காதலுக்கு விக்னேஷ் இடையூறாக இருக்கிறார் என மனைவி யாமினியும் கள்ளக்காதலன் சதீஷ் ஆகியோர் கூட்டு சேர்ந்து விக்னேஷை தீர்த்தக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு 11 மணிக்கு விக்னேஷ் வீட்டுக்கு சதீஸ் வந்துள்ளார் . அப்போது நாளை உனக்கு பர்த்டே அண்ணா. நான் உனக்கு பார்ட்டி தருகிறேன் வா என்று அழைத்து சென்றுள்ளார்.

பிறகு மாந்தோப்பு பின்புறம் உள்ள கிணற்றின் அருகில் உட்கார்ந்து இருவரும் மது குடித்துள்ளனர். விக்னேஷுக்கு போதை தலைக்கு ஏறியதும் உனக்கு நான் பர்த்டே சர்ப்ரைஸ் ஒன்று தருகிறேன் என்று சொல்லி தான் வைத்திருந்த கருப்பு துணியால் கண்களை மூடிக்கொள் என கூறி துணியால் கண்களை கட்டியுள்ளார்.
அதன் பிறகு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு ஒன்றும் தெரியாது போல் விநாயகபுரத்துக்கு சென்றுள்ளார்.

போலீசார் இன்று காலை யாமினியிடம் விசாரித்த போது சிகரெட் பிடிக்க வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்லி வந்தார்.
இதனால் போலீசாருக்கு யாமினி மீது சந்தேகம் வலுத்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் யாமினியும், கொலை செய்யப்பட்ட விக்னேஷின் தம்பி முறையான சதீசும் கள்ளக்காதலில் ஈடுபட்டதும், அந்த கள்ளக்காதலுக்கு விக்னேஷ் இடையூறாக இருந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அழைத்து சென்று விக்னேஷை கழுத்து அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.

அதே நேரம் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு வந்த சதீஷ் ஒன்றும் தெரியாது போல் என்ன நடந்தது? ஏது நடந்தது என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். இதற்கிடையே நேற்றிரவே கொலை செய்யப்பட்டபோது சட்டையில் ரத்தக்கரை படிந்ததால் அந்த சட்டையை மறைவான இடத்தில் வைத்து எரித்துள்ளார்.
மேலும் தான் அணிந்திருந்த பேண்ட்டை கழற்றி பெட்டியில் மறைத்து வைத்தார். தொடர்ந்து போலீசார் யாமியுடனுன், சதீஷடனும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















