ஆசிட் வீச்சு.. 14 ஆண்டுக்கால போராட்டம்.. `வாழ்வதற்கான விருப்பத்தையே இழந்துவிட்டோம்’- சகோதரிகள் குமுறல்!!

35

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என, டெல்லி உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருக்கிறது. மேலும், இரு சகோதரிகளுக்கும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.

டெல்லியில் சமர் – ஜவேரியா என்ற சகோதரிகள் இருவருக்கும் பக்கத்து வீட்டாரால் திருமண வரன் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வரனைச் சமர் நிராகரித்தார். இதனால் மணமகன் வீட்டார் ஆத்திரமடைந்தனர்.

இந்த நிலையில், சகோதரிகள் இருவரும் அழகு நிலையத்திலிருந்து ரிக்ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்… அவர்கள்மீது ஆசிட் வீசினர். இந்தச் சம்பவம் 2009-ம் ஆண்டு நடந்தது.

இதில் பலத்தக் காயமடைந்த சகோதரிகள், இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முடிவெடுத்து, சட்டப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, டெல்லி உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருக்கிறது. மேலும், இரு சகோதரிகளுக்கும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறது.


இது தொடர்பாகப் பேசிய பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் அனுஜ் கபூர், “நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும்.

ஆசிட் தாக்குதலின் விளைவாகப் பாதிக்கப்பட்ட இருவரும் இரு கண்களிலும் முழுமையான பார்வையை இழந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த சட்ட உதவியும் வழங்கப்படவில்லை.

அவர்களின் சாட்சியங்கள் விரோதமான அமைப்பில் பதிவு செய்யப்பட்டன. விசாரணை நடத்தப்பட்ட விதமும் இந்த வழக்கை இத்தகைய தீர்ப்புக்கு நகர்த்தியிருக்கிறது. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய பாதிக்கப்பட்ட சகோதரிகளில் இளையவர், “நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, நாங்கள் சட்டப் போராட்டத்தில் மட்டுமல்ல, வாழ்வதற்கான விருப்பத்தையும் இழந்துவிட்டோம். இதைச் செய்தவர்கள் துரதிஷ்டவசமாக மகிழ்ச்சியாக உள்ளனர்.

குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக வலம் வருவார்கள். ஆனால் நாங்கள் ஒரு மெய் நிகர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறோம். எங்களுக்கே எங்களுக்கான ஒரு அறையில் பூட்டப்பட்டிருக்கிறோம்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்கிறோம். அப்போது முதலாம் ஆண்டு எம்.பி.ஏ மாணவியாக இருந்த அக்கா சமருக்கு ஒரே ஒரு கனவு இருந்தது… வேலை தேடிக்கொண்டு, திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதுதான் அது.

ஆசிட் எங்களின் முகத்தை மட்டுமல்ல, எங்கள் கனவுகளையும் சிதைத்துவிட்டது. எங்களின் அப்பாவின் ஓய்வூதிய பணத்தில் சிகிச்சை செய்துவந்தோம். இப்போது அப்பாவும் இறந்துவிட்டார். எங்களின் எதிர்காலம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.