ஆன்லைன் ரம்மியால் பரிதாபமாக பலியான பெண்… அனாதையான குழந்தைகள்!!

1179

சென்னை..

பெரிய அளவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஓன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மணலியை சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவரது மனைவி பவானி (29). இவர்களுக்கு 3 வயதில் மெக்காட்டிக் பேரஸ், ஒரு வயதில் நோயல் கிறிஸ் ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

பாக்யராஜ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு மண வாழ்க்கை பவானிக்கு இனிமையானதாகவே இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஓன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது.

பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார். ரம்மி விளையாட்டு தொடர்பாக வரும் விளம்பரங்கள் அவருக்கு அதில் மேலும் ஆர்வத்தை தூண்டியது. இதனால் பல்வேறு வழிகளிலும் பணத்தை தயார் செய்து பவானி ரம்மி விளையாட்டில் மூழ்கினார்.


இதில் அவருக்கு பண இழப்பு ஏற்பட்டது. ஆனால் பவானி ரம்மி விளையாட்டுக்கு முழுமையாக அடிமையானதால் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை. பவானி ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்து அவரது கணவர் பாக்யராஜ் மற்றும் பெற்றோர் கண்டித்தனர்.

ஆனால் அவர்களது பேச்சை பவானி கேட்கவில்லை. பவானிக்கு 2 தங்ககைகள் உள்ளனர். முதல் தங்கை பாரதி எண்ணுரிலும், 2-வது தங்கை கவிதா பெரியபாளையத்திலும் வசித்து வருகிறார்கள். இருவரிடமும் தலா ரூ.1½ லட்சம் பணத்தை பவானி வாங்கியுள்ளார். இந்த ரூ.3 லட்சம் பணத்தையும் தனது வங்கி கணக்கில் செலுத்தி ரம்மி விளையாட்டில் அவர் ஈடுபட்டார்.

வீட்டில் இருந்த தனது 20 பவுன் நகைகளை விற்று வங்கி கணக்கில் செலுத்தியும் பவானி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த நகைகளை விற்ற பணம் லட்சக்கணக்கில் இருந்துள்ளது. இவை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரம்மி விளையாட்டில் செலுத்தி பணத்தை இழந்துள்ளார்.

இப்படி ரம்மி விளையாட்டு மூலமாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் பவானி பணத்தை பறி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பவானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் குடும்ப தலைவியாக இருந்த 2 குழந்தைகளின் தாய் இளம் வயதிலேயே லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான் ஓன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டுள்ளது.