இறந்தவருக்கு 5 மணி நேர சிகிச்சை… உறவினர்கள் போராட்டம்… வெளியான பகீர் தகவல்!!

507

மும்பை….

மும்பை தானே கல்வா மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 5 நோயாளிகள் ஒரே நாளில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்நேரம் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த ஒருவரின் மனைவி உள்ளூர் எம்.எல்.ஏ.வுக்கு மொபைல் செய்து மருத்துவர்கள் சரியாக சிகிச்சையளிக்க மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ அங்கு நேரில் வந்து ஆய்வு செய்த போது மருத்துவமனையில் நோயாளிகள் ஆங்காங்கே படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தனர். இச்சம்பவம் குறித்து ஜிதேந்திர அவாத், “என்னிடம் புகார் செய்த பெண்ணின் கணவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார்.


ஆனால் 5 மணி நேரமாக அவர் இறந்ததை உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை. நான் சென்ற பிறகுதான் அவர் இறந்துவிட்டார் என தெரிய வந்தது.

அவசர சிகிச்சை பிரிவில் பல மணி நேரமாக இறந்த ஒருவரை எப்படி வைத்திருக்க முடியும். அவர் மூலம் மற்ற நோயாளிகளுக்கு தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. மருத்துவமனைக்குள் தெருநாய்கள் நடமாட்டமும் அதிகம்.

இங்கு அடிப்படை வசதிகள் இல்லை.மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை. ஒரே நாளில் 5 நோயாளிகள் மருத்துவர்களின் கவனக்குறைவால் இறந்துள்ளனர்” என்றார்.

இச்சம்பவத்திற்கு பிறகு எம்.எல்.ஏவும் அவரது கட்சியினரும் மருத்துவமனைக்கு வெளியில் போராட்டம் நடத்த முயன்றனர். இச்சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

இது குறித்து மருத்துவமனையின் டீன் டாக்டர் ராகேஷ் பரோட், “அவசர சிகிச்சை பிரிவில் ஒருவர் இறந்துள்ளார். சில சட்ட நடவடிக்கைக்காக உடல் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்தது.

மற்ற பிரிவில் இறந்தவர்கள் மருத்துவர்கள் கவனக்குறைவால் இறக்கவில்லை. மருத்துவமனையில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.