உறங்குவதுபோல் நடித்து, பக்கத்து சீட் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை.. விமானத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

591

மும்பையில்..

விமானத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையிலிருந்து கெளகாத்திக்கு இரவு விமானம் ஒன்று புறப்பட்டது. இரவு என்பதால் விமானம் புறப்பட்டவுடன் விளக்கின் வெளிச்சம் குறைக்கப்பட்டது.

பக்கத்து பக்கத்து இருக்கையில் ஓர் ஆணும், ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். அந்த ஆண் பயணி பெண் பயணி உறங்கிய நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பான புகாரின்பேரில் பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைதுசெய்யப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், “நான் சிகிச்சைக்காக மும்பை வந்து, பின்னர் கெளகாத்தி வந்துகொண்டிருந்தேன். நான் அரை உறக்கத்தில் இருந்தபோது, என்மீது ஏதோ கை படுவதுபோல் இருந்தது.

உடனே எனக்கு விழிப்பு வந்துவிட்டது. சில நிமிடங்களில் மீண்டும் என்மீது அந்தக் கை பட்டது. ஆனால், அந்தக் கைக்குச் சொந்தக்காரர் உறங்குவதுபோல் கண்ணை மூடியிருந்தார். அதனால் நான் அவசரப்படாமல் பொறுமை காத்தேன்.


சில நிமிடங்களில் மீண்டும் அந்தக் கை, என்மீது அத்துமீறலாக தொட்டது. உடனே அந்தக் கையைப் பிடித்துக்கொண்டு கத்த ஆரம்பித்தேன். மின் விளக்கைப் போட்டு விமான பணியாளரை அழைத்தேன். அந்த நபர் நடந்த காரியத்துக்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.

ஆனாலும் நான் அழுதுகொண்டே நடந்த சம்பவத்தைத் தெரிவித்தேன்” என்றார். பாலியல் தொல்லை கொடுத்த பயணி கெளகாத்தி விமான நிலையத்தில் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் போலீஸ் நிலையம் வரை வந்து சாட்சி சொன்னதை பாதிக்கப்பட்ட பெண் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். கடந்த மூன்று மாதங்களில் பெண் பயணிகள் இது போன்று பாலியல் தொல்லைக்கு ஆளாவது 5-வது சம்பவமாகும்.

கடந்த வாரம் மஸ்கட்டிலிருந்து மும்பை வந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகக் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.