நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜாரை சேர்ந்தவர் மாரிமுத்து (44). மாரியம்மன் கோயில் பூசாரி. இவரது மனைவி வினோதா (40). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி கோயிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து வினோதா கணவரை செல்போனில் அழைத்தார். ஆனால் எடுக்கவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனால் அவர் கோத்தகிரி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று காலை இதே பகுதியில் உள்ள மாதா கோயில், கோவில் மேட்டில் மாரிமுத்து படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், மாரிமுத்து அடித்துக்கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் மனைவி தனலட்சுமி (25), கோத்தகிரி அருகே எம்.கைகாட்டியை சேர்ந்த உதயகுமார் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கைதான தனலட்சுமி கூறியதாவது: எனக்கும், சேலத்தை சேர்ந்த முரளிதரன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்த உதயகுமார் (40) என்பவருடன் திருமணம் செய்யாமல் கோத்தகிரி மாதா கோயில் பகுதியில் உள்ள கோவில்மேடு பகுதியில் வசித்து வந்தேன். உதயகுமாருக்கும் திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கோயில் பூசாரி மாரிமுத்துவிற்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாங்கள் நெருங்கி பழகினோம். இதைத்தொடர்ந்து பூசாரி மாரிமுத்து அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து சென்றார். சம்பவத்தன்று கோயிலில் ஆயுதபூஜையை முடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு மாரிமுத்து வந்தார்.
நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம். அப்போது உதயகுமார் திடீரென அங்கு வந்து விட்டார். இதனால் அவருக்கும், எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலில் மாரிமுத்துவை, உதயகுமார் சுவற்றில் தள்ளி தாக்கினார்.
இதில் மாரிமுத்துவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனால் பயந்துபோன நானும், உதயகுமாரும் மயக்க நிலையில் இருந்த மாரிமுத்துவை மேலும் பலமாக தாக்கி வீட்டு வாசலில் இருந்து வெளியே தள்ளினோம். இதில் மாரிமுத்து இறந்து விட்டார்.
இரவு முழுவதும் நானும், உதயகுமாரும் வீட்டிலே இருந்துவிட்டு அதிகாலை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்து விட்டோம்.
இந்த நிலையில் கோவில்மேடு பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு தனலட்சுமி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். இதைத்தொடர்ந்து தனலட்சுமி, உதயகுமார் ஆகிய இருவரையும் போலீசார் ஊட்டி ஜூடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்றிரவு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.