ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விவகாரம் : அரசாங்கம் விளக்கம்!

804

ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு இருக்கும் அந்த உரிமையை ஒருபோதும் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க மாட்டோம் என ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் அரசாங்க தகவல் திணைக்களத்தினாலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் எமது எதிர்த்தரப்பினர் இதுதொடர்பாக பொய் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது,

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அதன் ஓர் அங்கமாகவே இதுவரை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அடையாள அட்டையை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும் என தெரிவித்திருக்கின்றார்.

இவர்களின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு இருந்து வரும் அதிகாரத்தை நாங்கள் யாருக்கும் வழங்கவில்லை. ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் அதிகாரம் ஊடக அமைச்சுக்கே இருக்கின்றது. அந்த அதிகாரத்தை ஒருபோதும் நாங்கள் பாதுகாப்பு பிரிவுக்கு வழங்க மாட்டோம். அத்துடன் அவ்வாறான கோரிக்கை ஒன்றை பாதுகாப்பு பிரிவினால் எமக்கு முன்வைக்கவும் இல்லை.

மேலும் ஊடகவியலாளர்கள் எந்த தடைகளும் இன்றி தகவல்களை சேகரிப்பதற்கே குறித்த அடையாள அட்டை வழங்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டுக்குள் இருந்த சந்தர்ப்பத்தில், நாடு முழுமையாக அடைக்கப்பட்டிருந்த நிலைமையிலும் தகவல்களை சேகரிப்பதற்கு பாதுகாப்பு பிரிவுடன் கலந்துரையாடி, ஊடகங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தோம்.


அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை விநியோகம், ஊடக அமைச்சினாலேயே மேற்கொள்ளப்படும் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்