“என் மனைவி இரவுகளில் என்னுடன் இருந்ததை விட நாயுடன் இருந்தது தான் அதிகம்” நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க விவாகரத்து கோரிய கணவர்!!

172

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 41 வயது நபர், தனது மனைவியின் ‘அதிகப்படியான தெருநாய் பாசம்’ காரணமாக குடும்ப வாழ்க்கையே சிதைந்து விட்டதாக குற்றம் சாட்டி, ஆமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் வினோதமான முறையில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த தம்பதியர் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே மனைவி ஒரு தெருநாயை வீட்டிற்குள் வளர்த்துக் கொள்ள ஆரம்பித்ததாக கணவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு மாடிக்கட்டடத்தில் இதற்கு எதிர்ப்பு எழுந்த போதும், மனைவி எவ்வித கவலையும் கொள்ளாமல் தொடர்ந்து தெருவில் சுற்றித் திரியும் பல நாய்களை வீட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

இங்கே சமைக்கிறாரோ இல்லையோ, அந்த நாய்களுக்கு மட்டும் விதவிதமான உணவுகள் சமைத்து கொடுத்ததாகவும், அவற்றை குழந்தைகள் போல பராமரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கூட கணவரின் அருகில் படுக்காமல், நாய்களோடே அதிக நேரம் கழித்ததாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலைகளால் மனஅழுத்தத்துக்கு ஆளான கணவர், 2007ம் ஆண்டு பெங்களூருக்கே தப்பிச் சென்றதாகவும், அங்கும் மனைவி தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் மனுவில் விளக்கப்பட்டுள்ளது.

மேலும் மனைவி தெருநாய்களை ‘திருமணம் செய்து கொள்வது போல’ நடித்த சில படங்களை காட்டி தன்னை அவமானப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தன்னுடைய ஆண்மை குறைந்து விட்டதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.


இதனையடுத்து “இந்த வாழ்க்கையில் இனி தொடர முடியாது” என்று கணவர், ஆமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனைவிக்கு ரூ.15 லட்சம் ஜீவனாம்சமாக வழங்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மனைவி, கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால், ரூ.2 கோடி ஜீவனாம்சம் வேண்டும் என்று கோர்ட்டில் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் 1ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.